Wednesday, January 26, 2011

குறுந்தகட்டினை முடிந்த வரை பதிவெடுத்து தமிழர் இல்லம் தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து, நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள்

''உலகமெல்லாம் வாழும் தமிழ்ச் சொந்தங்களே... உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்​குறுந்தகட்டினை முடிந்த வரை பதிவெடுத்து தமிழர் இல்லம் தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து, நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள். அதுவே நம் இனத்​துக்கு நாம் ஆற்ற வேண்டிய தலையாய கடமை ஆகும்!'' என்ற பீடிகையுடன் 'ஈழத்தில் இனக்கொலை.. இதயத்தில் இரத்தம்’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார் வைகோ.


இலங்கைத் தமிழர் படும் இன்னல் குறித்து வைகோ பேசுவதும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுதுவதும், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஆச்சர்யமான விஷயம் அல்ல. ஆனால், அது குறித்து ஒரு சி.டி-யை அவர் தனது பெயரில் வெளியிட்டிருப்பதுதான் முக்கிய​மானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 'விழ விழ எழுவோம்’ என்ற குறுந்தகடு 'மறுமலர்ச்சி இளை​ஞர் பாசறை’ என்ற பெயரால் வெளிவந்தது. அதை அப்போது தயாரித்ததும் வைகோதான். ஆனால், அதில் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் இந்தக் குறுந்தகட்டில் அவரது பெயரே நேரடியாக இடம் பெற்றுள்ளது.


இதுகுறித்து வைகோவிடம் கேட்டபோது, ''எத்த​னையோ மாநாடுகளில் பேசுகிறோம். பொதுக்​கூட்டங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம். அங்கெல்லாம் கட்சி சார்பு இல்லாமல் இனப்படுகொலையைக் கண்டிக்கக் கூடிய தமிழர்கள் ஏராளமாகக் கூடுகிறார்கள். ஆனால் அதையும் தாண்டிக் குடும்பங்களுக்குள் இப்பிரச்னை கொண்டு செல்லப்பட வேண்டும். இளைஞர்கள், பெண்கள்... என அனைத்துத் தரப்புக்கும் இதை உணர்த்தினால் மட்டுமே ஈழத்தில் நடந்த அட்டூழியத்துக்கு விடிவும் தீர்வும் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த சி.டி. அந்த நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டது.


போரின் இறுதிக் கட்டத்தில், 'எங்களுக்காகவும் பேசுங்களேன்...’ என்ற குறுந்தகடு ஒன்று ஈழத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு தாய்த் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்​பட்டது. அதைத்தான் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டு நான் பேசினேன். 'உங்களுக்காக நாங்கள் பேசுவோம் சகோதரி’ என்று நானே சொன்னேன். 'இங்கு மட்டுமல்ல... அங்கேயே வந்து உங்களுக்காக உதவவும் நாங்கள் தயார்’ என்று சொன்னேன். அந்தக் கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் மட்டுமல்ல.... அந்த குறுந்தகட்டைப் பார்த்த பல லட்சம் தமிழர்களும் ஈழக் கொடுமையை உணரவும், தங்களால் ஆன எதிர்ப்பைக் காட்டவும் அந்த சி.டி-தான் தூண்டுகோலாக அமைந்​திருந்தது. ஒன்றரை ஆண்டு காலம் தமிழகத்தில் நடந்த அனைத்து எழுச்​சிக்கும் அந்த முக்கால் மணி நேரப் பதிவு முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. அது போன்ற தாக்​கத்தை 'ஈழத்தில் இனக்கொலை, இதயத்​தில் இரத்தம்’ என்ற இந்த சி.டி-யும் உருவாக்க வேண்டும்!'' என்கிறார் வைகோ.


''காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே இந்த சி.டி-யைத் தயாரித்தது மாதிரித் தெரிகிறதே?'' என்று வைகோவிடம் கேட்டபோது, ''குற்றம் உள்ள காங்கிர​ஸின் நெஞ்சு குறுகுறுக்கத்தான் செய்யும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைக்கு ராணுவ ரீதியாக எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'இலங்கை அரசாங்கம் பணம் கொடுத்தால் கூட ராணுவ உபகரணங்களை இந்தியா விற்காது’ என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் சோனியாவும் கலந்து கொண்டார். அவருடைய ஆதரவுடன்தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பார்த்த முதல் காரியமே சிங்கள அரசாங்கத்துக்கு எல்லா உதவிகளையும் செய்வது​தான். 20 தடவைகளுக்கு மேல் பிரதமருக்கு நான் கடிதம் அனுப்பினேன். பல தடவை அவரை சந்தித்தேன். 'அப்படி எந்த உதவியும் செய்ய மாட்டோம். செய்யவில்லை’ என்று மறுத்தார். பிரணாப் முகர்ஜியும் மறுத்தார். உயர்பதவியில் இருக்கும் அத்தனை பெரிய மனிதர்களும் பட்டப்பகலில் பொய் சொன்னார்கள். தமிழினத்தைக் கொன்று குவிக்க சிங்கள அரசாங்கத்துக்கு எல்லா வகையிலும் உதவிகள் செய்தார்கள். ஆறு கோடித் தமிழர்களை உள்ளடக்கிய இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம்... இந்த ஆறு கோடித் தமிழர்களுக்கு எதிரான முடிவை எடுத்தால் அதை நாம் கண்டிக்கக் கூடாதா?




'நாங்கள் இலங்கைக்கு எந்த உதவியையும் செய்யவில்லை’ என்று மறுக்க காங்கிரஸ் கட்சியால் முடியுமா? முடியாது! எனவேதான் அதற்​கான அரசியல் ரீதியான தண்டனையை வாங்கித் தர தமிழர்கள் தயாராகி​விட்டார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைக் கருவறுக்க இந்த ஒரு சி.டி. போதும்!'' என்கிறார் வைகோ.






இந்த சி.டி. புலனாய்வுத் துறை மூலமாக முதல்வர் கருணாநிதி, காங்​கிரஸ் தலைமை வரைக்கும் போயிருக்கிறது!